Saturday, September 29, 2012

யார் பெரிய முட்டாள்?

இரண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்கார
னைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து 'இன்னோவா கார்' ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்.

Friday, September 21, 2012

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!

தொன்று தொட்டு தமிழ் கலாச்சார முறைப்படி பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்தும் பொழுது "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!" என்று வாழ்த்துவார்கள். நல் வாழ்வு வாழ தேவையான பதினாறு இவையே: கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன் மக்கள், நல் ஒழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி.
அபிராமி அந்தாதியின் முதல் பாடலில் இப்பதினாறு செல்வங்களும் "உன் தொண்டர்களுக்கு அருள வேண்டும்" என்று அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கவடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாதசந் தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
பொருள்: கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

இப்பாடலை தினமும் ஒரு முறையாவது முழு மனதுடன் அன்னை அபிராமியை நினைத்துப் பாடி பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக!

Saturday, September 15, 2012

வியாபாரத் தந்திரம்!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன் வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொ
ரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!


மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

Wednesday, September 5, 2012

நான் உன் அடிமை இல்லை!

கெளதமபுத்தர் ஒரு ஊரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் எச்சிலை துப்பினான். தன் மேல் இருந்த எச்சிலை துண்டால் துடைத்து விட்டு, "இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் புத்தர். அருகில் நின்ற புத்தரின் பிரதம சிஷ்யனான ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்!" என்றார். அவன் எழுந்து கேட்டான் - "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தை கூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார், "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா?"