தமிழ் மருத்துவம்





சிறுநீரகக்கல் கரைய சித்தமருத்துவம்.

இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.
நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி)

வெந்தையம் - 50 கி,கருஞ்சீரகம் - 25 கி,ஓமம் - 25 கி,சீரகம் - 25 கி இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். (வறுத்தபின் மிக்ஸ்யில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

 
ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி தீர

சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்.

தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

மூலிகை ஷாம்பு

செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு தினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.  
மரு, காலாணி குணமாக
கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். (மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்)


வெள்ளைபடுதல் நிற்க


இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.


பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.


உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்


காலை மாலை நடைப் பயிற்சி
முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
பகல் தூங்காதிருத்தல்
வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்
இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்


இளைத்த உடல் பருமனாக
நேரம் தவறாமல் உணவு உண்ணல், மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்
இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல், உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல், உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவில் வெகு நேரம் விழிக்காதிருத்தல்.


பேதி நிற்க


வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்த பொடி 50 கிராம், ஓமம் பொடி 10 கிராம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி மோரில் உட்கொள்ள உடன் தீரும்.


மாசிக்காய் பொடி (100 கிராம்), காய்ச்சுக் கட்டி (100 கிராம்), இலவங்கப்பட்டை (25 கிராம்) மூன்றையும் பொடித்து ஒன்றாகக் கலந்து மேற்கூறியபடி உண்ணவும்.


தேமல் மறைய


தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிட வேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும். 


மலச்சிக்கல் தீர


கடுக்காயத் தோல் பொடி(100 கிராம்), ஓமம் பொடி (20 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து, இரவு படுக்கும் முன் 1 1/2 - 2 தேக்கரண்டி (5-10 கிராம்) இள வெந்நீரால் பருக மலச்சிக்கல் தீரும். சிறியவர்களுக்கு அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும்.


குப்பைமேனிச் சாறு (100 மிலி), விளக்கெண்ணெய் (500 மிலி) - இரண்டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சிச் சாறு வற்றியவுடன் இறக்கி வடிகட்டி 1 1/2 - 2 கரண்டி (5-10 மிலி) வீதம் உட்கொள்ள நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.


அகத்திக்கீரைச் சாற்றை இரவு படுக்கும் முன் சர்க்கரை கலந்து 50-60 மிலி வரை பருக வயிற்றுப்புழுவுடன் மலச்சிக்கல் தீரும்.


முகப்பரு


கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.


நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் முல்தாணி மட்டியை பொடித்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும். 


நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10, நன்கு ‍சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும.


உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.



தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.
 



கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க 


தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு தீரும்.  


காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்


தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.
 

சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும். 


பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்
 
கொத்தமல்லி விதை (10 கிராம்), சீரகம் (10 கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும்.
இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.
 



பூண்டின் சக்தி:
சன்னியோடு வாதன் தலைநோவு தாள்வலி
மண்ணிவரு நீர்க்கோவை வன்சீதம்-அன்னமே!
உள்ளுள்ளி காண்பாய் உளைமூல ரோகமும்போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - சுரக்காய்ச்சல், வாத  நோய்கள், தலைவலி, மண்டைக்குத்து, நீரேற்றம், இருமல், இரைப்பு, வயிற்றுவலி போன்றவற்றை நீக்கச் செய்யும்.  முப்பிணி சீதக்கழிச்சல், மூலம், இவைகளுக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப்பூண்டு பயன்படும்.