சிரிக்க சிந்திக்க

கருத்துள்ள சிரிப்பலைகள்!

எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , " இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு !" என்று சொன்னான் . அதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .
அறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன . "இவையெல்லாம் யாருடையவை?" என்று எமன் கேட்டான் .
"பிரபு ! இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது" என்றான் சித்ரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....?" என்று எமன் கேட்க ,.
"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது !" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .
- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து
------------------
உண்மைதானே?

இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும், ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட  நாடு...

தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்.. வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

வாக்கிங் போறது எளிதானது தான்... வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..
---------------------------
கி.வா.ஜ வின் சிலேடை:

கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.

கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

_________

ஒரு குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' என
க் குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!

__________

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிட சொன்னார்கள்.கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.
___________

பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதிப் பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த
கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, 'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்' என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.
 அடுத்து இறை வணக்கம் படிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, "நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்" என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.
____________

ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.
ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ.
____________

ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ.

_____________________
ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."அட..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு. இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு. இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே? கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு. அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான். எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக ஏன் போகக் கூடாது என்று கூறினார்கள் தெரியுமா?

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம். பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!


பெல்ட்
இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்.

''நிலைமை மிக மோசம். உணவு அவசரத் தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும், ''
ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது.
''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும்  உள்நாட்டிற்கும், ரஷ்யப் போர் முனைக்கும் தேவைப்படுகிறது. ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்.''
முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்.
''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''


இரவல்
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர், ''என் அறையில் படிப்பதாக இருந்தால்
தருகிறேன்,'' என்றார்.  மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். 


சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம், ''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,'' என்று கேட்டார். 

மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார், ''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''


 பஞ்சம் எப்படி வந்தது? 
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார், ''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?'' ஷா சொன்னார், ''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

 ஆங்கிலேயர்கள் யார்? 
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம், ''நேதாஜி சொன்னார், ''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

இயல்புதானே? 
பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப் போனார். ஆதீனத் தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல், ''இயல்பாக என்ன இப்போது நடந்தது?'' என்று கேட்டார்.  கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார், ''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

திருநாள் எப்போது வரும்? 
ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே, ''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?

பிடித்த மதம் எது? 
மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார், ''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும், சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....'' என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,'' என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.

வரவேற்பு 
காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும் போது, ''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே, ''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால், என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?'' என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.

மும்மணிகள்
ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர்,  ''இவ்விழாவில் மும்மணிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளனர்,'' என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார். அவர், ''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி.. இன்னொருவர் ரசிகமணி.  இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,'' என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.


பேசும் எந்திரம்
பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். ''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,'' என்றார். எடிசன் அவரிடம்  சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது  உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


சீனிவாசன்
பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு, ''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!'' என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,'' அடடே, எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''  எறும்பு சீனியில்  வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்'' என்றார்.



உபயோகம்
1961ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார். பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு, ''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது  உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.'' என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து, ''இதோ, என் தலையைப் பாருங்கள்,'' என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார், ''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?'' நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.
 
சொல்லின் செல்வர்
ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.'' என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார்  தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான்  சொல்கிறேன் .'' 


அறிஞர்
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், ''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?'' வாலி சொன்னார், ''ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும் போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை  தேர்ந்தெடுத்தேன்.'' அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், ''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி சிரித்துக் கொண்டே, ''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!'' என்றார். 


தெரியுமா?
பிரபலமான நாவலாசிரியர், ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
 

அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.

இப்படிக்கு,

ஜார்ஜ் மூர்.


அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
 

அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம். அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி, ''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!'' என்று பதில் சொல்லியதாம்.

இப்படிக்கு,

ஆர்ச் பிஷப் 


உடைமை
அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர், ''நண்பரே, உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே, உமது மனைவியையும் பொது உடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம்
கேட்டார், ''தனி உடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?'' நண்பர் வாயைத் திறக்கவில்லை. 


கெளரவம்
இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும் போது, ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக்

கருதப்படுவார்கள்.'' என்றார். உடனே எட்வர்ட், ''என்ன, எல்லோரும் ஒன்றாகக்
கருதப்படுவார்களா? என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?'' என்று சந்தேகம் கேட்டார். ''ஆமாம்.'' என்று ஆசிரியர் கூறினார். ''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.'' என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.

சோம்பேறி
மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்த பின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது, மேனேஜர் சொன்னார், ''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.'' மார்க் ட்வைன் உடனே சொன்னார், ''நீங்கள் தான் சரியான சோம்பேறி .''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்."நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம்  ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''

மரியாதைக் குறைவு
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு, ''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.'' என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர், ''என்ன கவிஞரே, இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே, கொஞ்சம் மாற்றக் கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா?'' என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாக, ''டேய், நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல. ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக் கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள் நீ. பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு.'' என்றார்.


நம்பிக்கை
தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு, இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த என் முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளிலும் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது. 


மேதைகளின் நகைச்சுவை

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , ”ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டு மொத்தமாக பதில் கூறினார்கள் .

உடனே , ”ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்

.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…“ என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு


ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.

கலைவாணரின் அறிவாற்றல்
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்.

"அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:

"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.

ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.

அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை."



கிருபானந்த வாரியார் -  நடிகவேள் எம்.ஆர்.ராதா

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.

இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.