Monday, September 8, 2014

தமிழ் நெஞ்சங்களுக்கு!

சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெற்று, சென்ற இடங்களில் உள்ளவர்களையும் வாழ வைத்து, அன்றும், இன்றும் உலகை செழிப்புற செய்து கொண்டு இருக்கும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!

இதுவரை, நான் படித்து, கேட்டு, ரசித்து மகிழ்ந்த துணுக்குகளை, செய்திகளை, சிந்தனைகளை, கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்ததின் பலனாக உருவானதே இந்த பக்கங்கள். இந்த பக்கங்களில் எழுதப் பட்டுள்ளவை அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தவோ, கேலி செய்யும் நோக்குடனோ எழுதப் படவில்லை. சிரிக்கவும், சிந்திக்கவும், தெரிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளப்பட்டவையே.

உங்களுக்குத் தெரிந்தவற்றை எனக்கு அனுப்புவதன் மூலம் நம் உலகத் தமிழ் நண்பர்களின் மனதை லேசாக்கி, மகிழ்வித்து, மெருகேற்றி அவர்கள் மகிழ, நாமும் மகிழ்வோம். படித்து மகிழுங்கள். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னுடைய facebook பக்கமான - Catalyst - Igniting Growth க்கு ஒரு முறை சென்று பாருங்கள்! பிடித்திருந்தால் "லைக்" ஐ கிளிக் செய்து தினமும் நான் பகிரும் கருத்துக்களைப் படித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை மானென்று சொல்வதில்லையா?

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மஹாராஜ், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித் திறமைகளை அறிந்து கொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.

மனமுடைந்த ஜெய் சிங் மஹாராஜ், தன் விடுதி அறைக்கு வந்து, தன் வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச் செய்தார்.
  
சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பெரும் மரியாதையுடன் நடந்தது. 

அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. 

ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும்,குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பியது. அது மட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக் கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக ரோல்ஸ் ராய்ஸ்கார்களின் மூலம் குப்பை அள்ளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றினார்.

Tuesday, August 26, 2014

டாக்டருக்கு படிச்சா போதுமா?

ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார்.
.
பக்தர் ஒருவர் அவரிடம், ""ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?,'' என்று கேட்டார்.
.
ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,''.
.
நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,'' என்றார் பக்தர்.
.
ராமகிருஷ்ணர் அவரிடம்""நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
.
""டாக்டர்'' என்றார் வந்தவர்.
.
""அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,'' என்றார் ராமகிருஷ்ணர்.
.
""எப்படி முடியும்? படித்தால் தான் முடியும்,'' என்றார் வந்தவர்.
.
""படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் "பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள்,'' என்றார் ராமகிருஷ்ணர்.

Thursday, August 7, 2014

வெங்காயக் கதை!

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம். ஒரு நாள் மூணு பேரும் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம். தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம். வீட்டுக்கு அழுதுகிட்டே வர வழியில லாரியில அடிபட்டு தக்காளி நசுங்கி செத்துப் போச்சாம். உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கான்னு கேட்டுச்சாம். அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்! அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதாம்..!!

Friday, June 20, 2014

கருப்பு வைரம்!

காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...
ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார். அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார். அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.
 

திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. காமராஜர் அவரிடம், "நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன்.ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
 

இப்படி ஒரு தலைவரை இந்த வையகம் இனி பெற போவது இல்லை.இவரின் சிறப்பு கடைசி தமிழன் இருக்கும் வரை இறக்க போவதும் இல்லை. தலைவன் என்பவன் யார் என்பதை இந்த வையகம் அறியட்டும்.

Thursday, February 27, 2014

காமராஜரின் (தலைமை) குணாதிசயங்கள்!

 

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: 

என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே' எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


என்னுடைய facebook பக்கமான - Catalyst - Igniting Growth க்கு ஒரு முறை சென்று பாருங்கள்! பிடித்திருந்தால் "லைக்" ஐ கிளிக் செய்து தினமும் நான் பகிரும் கருத்துக்களைப் படித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Thursday, December 19, 2013

நம்மைக் கொல்வது எது?

சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான்.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது ?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மனரீதியாக, உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது .