சிந்திக்க சில கதைகள்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு ...வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.”
படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.
அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.


எந்த கோணத்தில் பார்க்க வேண்டும்?

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒரு நாள் ஊர்த் தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாக,  "அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார்.  ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று
கேட்டார். பையன் ”தங்கம்” என்று சொன்னான்.
 
”பின் ஏன் ஊர்த் தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” கோபத்துடன் கேட்டார் அறிஞர்.
 

"தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!


யார் புத்திசாலி?

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.  சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. 
அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். 

நான்கு போல்ட்டையும் கழட்டி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும் போது அவர் கால் இடறி நான்கு போல்ட்டும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார். அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
 
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை  கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.

இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமனையில் என்று கேட்டார். இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார் மனநல நோயாளி.


எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.



வெற்றிக்குக் காரணம்!

சிறியதொரு நகரம். அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே
மரணத்திற்கு அஞ்சி,மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது, புலம்பி, புரண்டு
கொண்டுதான் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானிய
வகைகள் பயிராகியுள்ளன.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
படகோட்டி வியப்பில் ஆழ்ந்தான்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்குத்
தேவையான ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும் வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !



அன்பிற்கு தடை எது?

ஒரு அபூர்வமான முனிவரிடம்  பெண் ஒருத்திவந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக் கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள்.
மறுநாளும் சென்று புலியைக் கண்டாள். இன்றும் புலி உறுமியது.  இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அருகில் செல்ல பயமாக இருந்ததால்  திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக் கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நீதி: நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது!


சுமைதாங்கி மரம்.

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம்
பழுதடைந்து  நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். 

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

வண்டியை கிளப்ப
முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார்
தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த
பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார். 


"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நண்பர்களே! நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்...


 ஆசையின் அளவு:
ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.

ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.

சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை. கடவுள் மயங்கி விழுந்தார்.




பொறுமை கடலினும் பெரிது.

ஒருவன் கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது. இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான்.

"இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம்
செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதி இருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான்.

உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து
தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று...

"என்னடா இது... 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ பதவிக்கான அறிகுறி
ஒன்றுமே தெரியவில்லையே! கீரிடத்தை எடுத்துக் கொண்டு யாராவது வருகின்றனரா?' என்று சுற்றும், முற்றும் பார்த்தான். யாரையும் காணோம். இவனுக்கு பொறுமையும் குறைந்தது.

"சரி... எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம்...' என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தான். 96, 97, 98. ஊஹும்... ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம்.

பொறுமையை இழக்க ஆரம்பித்தான். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது; பலன் தெரியவில்லை. பொறுமையை இழந்தான். நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தான். அவ்வளவுதான், இவன் முன் தோன்றினார் பெருமாள்.
"பக்தா... நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்;
ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும்  பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன். "நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மா கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்...' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து விட்டார்.
பொறுமை எவ்வளவு முக்கியம் என்று, இதிலிருந்து தெரிகிறதா?

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்  போது  வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.  சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க,  திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை,  இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்க வில்லை.  அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,  சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.  சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி  ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.  கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி,  கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்  என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு  வந்ததால்தான் கழுதை கத்தியது எனப் புரிந்து கொண்டான்.  அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான்.  நாயைக் கண்டு கொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக் கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட  இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.  நாய் செய்துக கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப்பட்டது.  நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப் போன கழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.

தண்ணீர்
தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,

”இதுவே மேலும் குளிர்ந்தால்…?”

‘பனிக்கட்டி’என்றான் சீடன்.
”கொதித்தால்…?” ‘நீராவி’

ஞானி சொன்னார், ”மனிதனும் குளிரும் போது திடமாகிறான். கொதிக்கும் போது ஆவியாகிறான்.”

விடாமுயற்சி

கடலோரம். அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
”உனக்கு என்ன தெரிகிறது?”
‘திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.’
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
‘துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.’
குரு சொன்னார், ”சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு."

புகழுக்குக் காரணம்

பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,
”நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.
நீ பால் தந்தாலும், நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .”
பசு கூறியது:  "நீ கூறுவதுஉண்மையே. அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

வித்தியாசம்

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

மதிப்பு

ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத்தான் தெரியும்.