Thursday, October 31, 2013

உங்கள் வளர்ச்சிக்கு!

ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளர்ச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.


இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது, பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம் ,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது , உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது, உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது, நீங்கள்  நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்! இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. உங்கள் ஆழ்மனத்தின் கருத்துக்களையும், சிந்தனைகளையும் தன்னுள் கிரகித்துக் கொண்டு, உங்களுக்கு பிரதிபலித்துக் காட்டுகிறது! நல்ல சிந்தனைகள் உங்களுக்கு நல்வாழ்வைத் தரும்! 
கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து எனது facebook பக்கமான gatewaytoleisure க்கு சென்று, நல்ல சிந்தனைகள் என்ற பதிவுகளைப் பாருங்கள்/பகிருங்கள்.
https://www.facebook.com/media/set/?set=a.179166298842160.43450.174514152640708&type=3
உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து https://www.facebook.com/GatewayToLeisure  "LIKE" ஐ கிளிக் செய்யுங்கள். எனது பகிர்வுகள் உங்களுக்கு உடனுக்குடன் வரும்.
 

Friday, October 4, 2013

தங்களின் மேலான கவனத்திற்கு!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,

கடந்த முப்பத்துமூன்று ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த பதினைந்து வருடங்களாக பல்வேறு பி.எஸ்.என்.எல் பயிற்சி மையங்களில் மனிதவள மேம்பாட்டு துறை சம்பந்தப்பட்ட வகுப்புகளை கையாண்டு வந்துள்ளேன். மேலாண்மை வகுப்புகள் நடத்துவதே எனது குறிக்கோள். எனது கனவுகள் நினைவாக இன்று முதல் "Catalyst - Igniting Growth" என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக நல அமைப்புகள்/மையங்கள் போன்றவற்றில் தமிழிலும், ஆங்கிலத்திலும் விருந்தினர் உரை, சொற்பொழிவு, மேலாண்மை நோக்குநிலை கருத்தரங்குகள் நடத்த உள்ளேன்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்புகளின் மூலம் என்னுடைய வலைப்பதிவுக்கு சென்று, படித்துப் பார்த்து அதனை உங்களின் நண்பர்களுடனும், தெரிந்தவர்களுடனும் பகிருங்கள்.

http://catalystignitinggrowth.blogspot.in/

https://www.facebook.com/pages/Catalyst-Igniting-Growth/454022301379929 (Click “Like” on this page)

உங்களுக்கு தெரிந்த இடங்களில் (அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் /மையங்கள்) எனக்கு பரிந்துரை செய்யுங்கள். உங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், நல்லாசியும் எனக்கு என்றும் உண்டு என்று நம்பும்,
சண்முகசுந்தரம்.


Thursday, October 3, 2013

இப்படியும் தலைவர்கள் வாழ்ந்தார்கள்!

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ - அதில் கலந்து கொள்ளும் மக்கள், தொண்டர்கள் காலணா அரையணா, ஒரு அணா என்று நன்கொடையாக கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக் கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். 

நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. "அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்" என்றார். " சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா?" என்று கேட்டார் கஸ்தூரி ரங்கன். "அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, "எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். 

பிறகு காமராஜர் வேண்டிக் கொண்டது போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்ல படியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது "ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்" என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் "அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்" என்று கூறியவர், "ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்" என்றார். 

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசி முடித்தார். பத்திர பதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். "யார் பெயரில் பத்திரப் பதிவு?" என்று கேட்டார் காமராஜர். "உம் பெயரில்தான்" என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் "எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம்" என்றார். 

எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள "தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்". கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ்நாடு, இந்தியா இன்று உள்ள நிலைமையை நினைத்தாலே நெஞ்சம் குமுறுகிறது.

கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து எனது facebook பக்கமான gatewaytoleisure க்கு சென்று, நல்ல சிந்தனைகள் என்ற பதிவுகளைப் பாருங்கள்/ பகிருங்கள்.
https://www.facebook.com/media/set/?set=a.179166298842160.43450.174514152640708&type=3
உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து https://www.facebook.com/GatewayToLeisure  "LIKE" ஐ கிளிக் செய்யுங்கள். எனது பகிர்வுகள் உங்களுக்கு உடனுக்குடன் வரும்.