Monday, September 8, 2014

தமிழ் நெஞ்சங்களுக்கு!

சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெற்று, சென்ற இடங்களில் உள்ளவர்களையும் வாழ வைத்து, அன்றும், இன்றும் உலகை செழிப்புற செய்து கொண்டு இருக்கும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!

இதுவரை, நான் படித்து, கேட்டு, ரசித்து மகிழ்ந்த துணுக்குகளை, செய்திகளை, சிந்தனைகளை, கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்ததின் பலனாக உருவானதே இந்த பக்கங்கள். இந்த பக்கங்களில் எழுதப் பட்டுள்ளவை அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தவோ, கேலி செய்யும் நோக்குடனோ எழுதப் படவில்லை. சிரிக்கவும், சிந்திக்கவும், தெரிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளப்பட்டவையே.

உங்களுக்குத் தெரிந்தவற்றை எனக்கு அனுப்புவதன் மூலம் நம் உலகத் தமிழ் நண்பர்களின் மனதை லேசாக்கி, மகிழ்வித்து, மெருகேற்றி அவர்கள் மகிழ, நாமும் மகிழ்வோம். படித்து மகிழுங்கள். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னுடைய facebook பக்கமான - Catalyst - Igniting Growth க்கு ஒரு முறை சென்று பாருங்கள்! பிடித்திருந்தால் "லைக்" ஐ கிளிக் செய்து தினமும் நான் பகிரும் கருத்துக்களைப் படித்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை மானென்று சொல்வதில்லையா?

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மஹாராஜ், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித் திறமைகளை அறிந்து கொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.

மனமுடைந்த ஜெய் சிங் மஹாராஜ், தன் விடுதி அறைக்கு வந்து, தன் வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச் செய்தார்.
  
சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு பெரும் மரியாதையுடன் நடந்தது. 

அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. 

ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும்,குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பியது. அது மட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக் கொள்ளாமல் அனுப்பப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக ரோல்ஸ் ராய்ஸ்கார்களின் மூலம் குப்பை அள்ளுவதை நிறுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்தியனின் தன்மானத்தை உலகுக்கு பறை சாற்றினார்.