ஆன்மீகம்

கண்ணன் ஏன் காப்பாற்றவில்லை?

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?" என்றார் உத்தவர்.

"உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்"  என்றான் பரந்தாமன்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்த பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.

"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.

"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.

"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.

"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!


திருநந்தித்தேவர்

முன் ஒரு காலத்தில் சிலாதர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பலகாலம் ஆகியும் குழந்தைபேறு இல்லை. தனக்கு சிவபெருமானின் அருள் பொருந்திய குழந்தை வேண்டி பல காலம் தவமிருந்தார். முனிவரின் தவத்தால் மனமுருகிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, "சிலாதரே! உம் தவத்தை மெச்சினோம். உமக்கு என்ன வரம் வேண்டுமோ அதனை என்னிடம் கேட்கலாம்" என்றார். சிலாதர், "இறைவனே! எனக்கு வேண்டியதெல்லாம் உன்னருள் கொண்ட ஒரு குழந்தையே" என்று கூறி கும்பிட்டு நின்றார். "கூடிய விரைவில் நீ ஒரு குழந்தையை அடைவாய்' என்று கூறி சிவபெருமான் மறைந்தார்.


மறுநாள் காலை பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

சிலாதர், ‘சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே’ என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி “அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு 'நந்தீசன்' என்ற திருநாமம் சூட்டுவோம்” என்றருளினார்.


நந்தீசன் சாஸ்திரங்களையும் பல கலைகளையும் விரைவாகக் கற்று வளர்ந்தான். ஒரு நாள் சிலாதரின் குடிலுக்கு மித்திரர், வருணர் ஆகிய இரண்டு முனிவர்கள் வருகை புரிந்தனர். அவர்கள் இருவரையும் தந்தையின் ஆணைப்படி நந்தீசன் நன்றாக உபசரித்தான். முனிவர்கள் கிளம்பும் தருணம் வந்தபோது, சிலாதர் அவர்களின் பாதங்களை நமஸ்கரித்தார். அவர்களும், "சிலாதரே! நீர் பல்லாண்டு காலம் வாழ்வீராக!" என்று வாழ்த்தினர். அடுத்து, நந்தீசன் அவர்களின் பாதங்களை வணங்கியபோது அவர்களின் முகம் வாடியது. அதனை சிலாதர் கவனித்து விட்டார். முனிவர்கள், "மகனே, பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நற்தொண்டு புரிந்து வாழ்வாயாக!" என்று வாழ்த்தினர்.

முனிவர்களின் மனதிலுள்ள கவலையை உணர்ந்த சிலாதர், அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களின் மனநிலைக்கு உண்டான காரணத்தை வினவினார். முனிவர்கள் சிலாதரிடம், "நாங்கள் உன் மகனுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் தகுதி அற்றவர்கள்." என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றனர். 

சிலாதர் மனமுடைந்தார். தந்தையின் மனவாட்டத்தை கண்ட நந்தீசன், தந்தையிடம் அதற்கான காரணத்தை வினவினான். குரல் தழுதழுக்க சிலாதர், முனிவர்கள் கூறியதை நந்தீசனிடம் கூறினார். நந்தீசன் மனமுடைந்து விடுவான் என்று எதிர்ப்பார்த்த சிலாதருக்கு, நன்தீசனின் பலத்த சிரிப்பு அதிர்ச்சியை அளித்தது.

"தந்தையே! நீங்கள் சிவபெருமானை தரிசித்து, அவரின் அருளால் என்னை அடைந்தீர்கள். சிவனருள் பெற்ற எனக்கு மரணமேது? கவலையை களைந்து, சிவனை துதிப்பீர்களாக!" என்று கூறி, தந்தையின் ஆசிபெற்று, புவனா நதிக்கரையை  அடைந்து, தீவிர தவத்தில் ஆழ்ந்தான். தவத்தின் தீவிரத்தால் அதிர்ச்சியுற்ற சிவபெருமான் உடனடியாக நந்தீசன் முன் தோன்றி, "உனக்கு வேண்டியதைக் கேள்!" என்றார்.


“வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது” என்றார் நந்தீசன். “அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு நீ அதிபனாக இருப்பாய். என்னுடைய நண்பனாக என்னுடனேயே என்றும் இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்” என்றருளினார்.


“நந்தீசர் எமக்கு மகன், அனைத்து கணங்களுக்கும் , அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். ‘சிவஞானத்தை’ போதிக்கும் குருவும் இவனே” என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.


தத்தாத்ரேயர் 

அத்திரி மகரிஷி - அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர். கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியை சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும். அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள். துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்... என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்... என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து, இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று... என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள். அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும், ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித் தர வேண்டினர்.தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்... என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்... என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள். நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து எனது facebook பக்கமான gatewaytoleisure க்கு சென்று, நல்ல சிந்தனைகள் என்ற பதிவுகளைப் பாருங்கள்/பகிருங்கள்.
https://www.facebook.com/media/set/?set=a.179166298842160.43450.174514152640708&type=3

உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து https://www.facebook.com/GatewayToLeisure  "LIKE" ஐ கிளிக் செய்யுங்கள். எனது பகிர்வுகள் உங்களுக்கு உடனுக்குடன் வரும்.நவராத்திரி கொலு : ஒன்பது படிகளின் தத்துவம்: 


மனிதன் படிப்படியாக வளர்ந்து, தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, ஒன்பது கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.

ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், சரஸ்வதி, லக்ஷ்மி, விநாயகர்.
 
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும் என்பது ஐதீகம்.

வரலக்ஷ்மி விரதம்.


முன் ஒரு காலத்தில், மகத தேசத்தில், குந்தினிபுரம் என்னும் கிராமத்தில், சாருமதி என்னும் பிராமண பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் கணவன் மீது அன்பு மாறா காதல்கொண்டு, குடும்ப நலனில் அக்கறை செலுத்தி, பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள். அவள் கணவன் மேல் செலுத்திய அன்பையும், அக்கறையையும் கண்டு வியந்த மகாலட்சுமி தேவி, சாருமதியின் கனவில் தோன்றி ஷ்ரவண மாதத்தில் சுக்ல, சுக்ர வாரத்தில் வரலக்ஷ்மி விரதம் இருக்குமாறு பணித்து மறைந்தாள். சாருமதியும் அன்றைய கனவிலேயே மானசீகமாக விரதத்தை முடித்தாள். மறுநாள் காலை தான் கண்ட கனவினை தன கணவனிடம் கூறினாள். கணவனின் அனுமதி பெற்று, ஊரிலுள்ள சுமங்கலிகளை அழைத்து, வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொண்டு சிறப்புற நிறைவேற்றினாள். அன்று பல அதிசயங்கள் நடந்தேறின. சாருமதியின் வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு தங்க ரதம் காத்திருந்தது. அவர்களின் வீடுகள், செல்வங்களால் நிரம்பி வழிந்தன. வரலக்ஷ்மியின் அருளினால் அவர்களின் வாழ்வு வளம் பெற்றது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் வரலக்ஷ்மி விரதம் சிறப்பாகக் கொண்டாடப் படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருப்பவள் மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மி எட்டு விதமான சக்திகளை/செல்வங்களை ஆட்கொண்டு, வாரி வழங்குவதால் மக்கள் அவளை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபாடு செய்கின்றனர்.

அஷ்ட லக்ஷ்மிகளை வணங்குவதால், வரங்களை வாரி வழங்கும் வரலக்ஷ்மி ஒன்பதாவது லக்ஷ்மியாக கருதப்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.


ஷ்ரவண மாதத்தில் பௌர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் வேண்டி லக்ஷ்மி தேவியை வழிபடுகின்றனர்.

வரலக்ஷ்மி விரதத்தின் மகிமையை பார்வதி தேவிக்கு சிவபெருமானே எடுத்துச் சொல்லுவதாக கந்தபுராணம் கூறுகிறது.

லிங்கோத்பவர்

ஒரு முறை, பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சை எழுந்தது. சர்ச்சை முற்றி சண்டையாக மாற, அதை தடுக்க, சிவன், அவர்களுக்கு இடையே உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் பெரிய தூணாக (தீப்பிழம்பாக) ஜோதி வடிவாகத் தோன்றினார். ஜோதி வடிவாகத் தோன்றிய அந்த தூணை சிவன் என்று அறியாத இருவரும் பிரமித்து நின்றனர்.

அத்தூணின் நுனியை யார் முதலில் தொடுகிறார்களோ அவரே பெரியவர் என்ற முடிவுக்கு வந்தனர். பிரம்மன், அன்னப் பறவையாக உருவெடுத்து உச்சியை நோக்கி பறந்தார். விஷ்ணு, பன்றியாக (
வராக அவதாரம்) உருமாறி, அத்தூணின் அடி நோக்கி ஓடினார். இருவரும் எவ்வளவு தூரம் சென்றும் அவர்களால் அதன் நுனியை அடைய முடியவில்லை. முடிவில்லாமல் ஓங்கி நிற்பது சிவனன்றி வேறொருவரும் இருக்க முடியாது என்பதை உணர்ந்த விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பினார். உச்சியை அடைய முடியாத பிரம்மனும்  கவலையோடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, சிவனின் தலையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூ பிரம்மனைப் பார்த்து, "ஏன் இவ்வளவு சோகமாய் காணப்படுகிறீர்கள்?" என்று வினவியது. பிரம்மன் தன் நிலையைக் கூற, தாழம்பூ, "நான் சிவனின் தலையிலிருந்துதான் வருகிறேன். என்னை சாட்சியாகக் கொண்டு, நீங்கள் சிவனின் தலையைப் பார்த்ததாக கூறலாமே" என்றது. தாழம்பூவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட பிரம்மனும், தாழம்பூவுடன் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி, தான் அந்த ஜோதியின் முடியைக் கண்டதாக பொய் சொன்னார்.

சிவனின் முன்பாகவே பொய் சொன்னதால், பிரம்மனின் குட்டு வெளிப்பட்டது. வணங்குதல் அல்லது துதித்தல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நாம் நம்மை விட உயர்ந்தவராக எண்ணுபவர்களை வணங்குகிறோம். பிரம்மன் தன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என்று நினைத்த காரணத்தால் தீப்பிழம்புத் தூணாக தோன்றிய சிவனின் தலையை கண்டதாக பொய் சொல்லினார். அதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாகி எவருமே வணங்காத சாபத்தை பெற்றார். பொய் சொன்னதால், அன்று முதல் யாரும் பிரம்மனை தனியாக வழிபடுவதில்லை. கோவில் கட்டி கொண்டாடுவதும் இல்லை. பொய் சாட்சி கூறியதால், தாழம்பூவும் அன்று முதல் பூஜைகளில் சேர்த்துக்கொள்ளப்  படுவதில்லை. இருவரும் தங்கள் அறியாமையை அறிந்து சிவனின் முன் தலை வணங்கி நின்றனர். சிவனும் அவர்களின் அறியாமையை மன்னித்து அருள் புரிந்தார். உருவமில்லா லிங்க வடிவாய் அடி, முடி தெரிந்திடா வண்ணம் தோன்றி பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அருள் பாலித்ததால், லிங்கோத்பவர் என்று அனைவராலும் வணங்கப்படுகிறார். ஜோதி வடிவாய்த் தோன்றி பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அருள் பாலித்த இடமே திருவண்ணாமலை என்கின்ற ஸ்தலம். சிவன் ஜோதியாக தோன்றிய நாளையே, தீபத் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

தஷிணாமூர்த்தி:

பிரம்மனின் புத்திரர்களான சனகன், சனந்தன், சனாதனன், சனத்குமாரன் ஆகிய நால்வரும் மெய்ப்பொருளின் உண்மையை அறிய கடுமையான வேள்விகளையும் தவத்தினையும் மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் உண்மையை அறிய முடியவில்லை. அவர்களுடைய சந்தேகங்களும் வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால் அவர்கள் வேறு வழியில்லாமல் சிவனிடம் சென்று தங்கள் வேண்டுதலைத் தெரிவித்தனர். சிவன், அவர்களை அழைத்துக் கொண்டு சென்று ஒரு ஆலமரத்தின் அடியில் யோக நிலையில் அமர்ந்தார். நால்வரும் அவரைச் சுற்றி கீழே அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு வார்த்தையும் பேசாமல் யோக நிலையைத் தொடர்ந்தார். அப்போது சிறிது சிறிதாக அவர்களின் சந்தேகங்கள் நீங்கி, மெய்ப்பொருளின் தத்துவங்களும் உண்மைகளும் விளங்க ஆரம்பித்தது. சிவனின் அந்த யோக நிலையே அவர்களை குழப்பத்தில் இருந்து விடுவித்தது.

சிவன், யோக நிலையில் குருவாய் அமர்ந்து, அந்த யோக நிலையின் சக்தியாலேயே எல்லாவற்றையும் தெளிவுறச் செய்து, அறிவுச் சுடராய் தவசிகளை மேம்படச் செய்தார். குருமார்களுக்கெல்லாம் குருவாய் இருந்து உண்மையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, உணர்ந்தே அறிய முடியும் என்பதை தெளிவாக்கினார். பிரம்ம புத்திரர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்தி, உண்மையை உணர வைத்த, யோக நிலையில் குருவாய் அமர்ந்து காட்சி தரும் சிவபெருமானையே இன்றும் நாம் தஷிணாமூர்த்தியாக வழிபடுகிறோம்.

ஏகாம்பரேஸ்வரர்:

நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்தும்  பஞ்சபூதங்கள் என்று கூறப் படுகிறது. பஞ்ச பூதங்களாக இருந்து நம்மை காப்பது சிவனே என்ற ஐதீகத்தின்படி, சிவன் பஞ்சபூத ஸ்தலங்களில் (நீர் - ஜம்புலிங்கேஸ்வரர் - திருவானைக்காவல், நிலம் - ஏகாம்பரேஸ்வரர் - காஞ்சிபுரம், காற்று - ஸ்ரீகாலஹஸ்தீஸ்வரர் - ஸ்ரீகாலஹஸ்தி, தீ - அருணாச்சலேஸ்வரர் (லிங்கோத்பவர்) - திருவண்ணாமலை, ஆகாயம் - நடராஜர் - சிதம்பரம் ) வியாபித்து பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பாக, ஓர் ஆற்றங்கரையின் ஓரமாக இருந்த ஒரு மாமரத்தின் அடியில், காமாட்ஷி என்ற ஒரு பெண், மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனை தீவிரமாக வழி பட்டாள். பக்தையின் தீவிர பக்தியைக் கண்ட சிவபெருமான், அவளின் பக்தியை பல விதங்களில் சோதித்துப் பார்த்தார். ஆனாலும் அவளின் பக்தி மேலும் தீவிரம் அடைவதைக் கண்டு பூரித்து போனார். கடைசியாக அவளை சோதிக்க, ஆற்றில் வெள்ளத்தை உருவாக்கினார். ஆற்றின் வெள்ளப்பெருக்கு சிவலிங்கத்தை கலைத்து விடுமோ என்று அஞ்சிய காமாட்ஷி, சிவலிங்கத்தை தன் மார்போடு அனைத்துக் கொண்டாள். சிவபெருமான் மிகவும் நெகிழ்ந்து, அவளுக்கு காட்சி தந்து, அவளை மணந்து கொண்டார். காமாட்ஷி (பார்வதி) தேவி பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையே இன்று நாம் ஏகாம்பரேஸ்வரராக வழி படுகிறோம். காமாட்ஷி தழுவத்  தோன்றியதால், 'தழுவக் குழைந்தார்" என்றும் அழைக்கப்படுகிறார்.

ஏகாம்பரேஸ்வரர்  சன்னதியின் ஸ்தல விருட்ஷமான மாமரம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம்மரத்தின் நான்கு கிளைகளில் நான்கு வெவ்வேறு விதமான, வெவ்வேறு சுவைகளில் காய்க்கும் காய்கள், நான்கு வேதங்களை உணர்த்துவதாகக்  கூறப்படுகிறது.

ஆன்மீகம் என்றால் என்ன? 
பிரபஞ்சம் (வட மொழி) = பிர + பஞ்சம்

பிர என்றால் விரிந்த என்று பொருள், பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருள் .கோள்கள் நட்சத்திரங்கள் உயிர்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவைகளால் விரிந்த வெளியை பிரபஞ்சம் என்று கூறுகிறோம்.

பஞ்ச பூதக்கள் = விண் (ஆகாசம் ), காற்று, நெருப்பு, நீர், நிலம்

விண்ணை தவிர மற்ற பூதக்களை புலன்களால் உணர முடியும், பிறகு எதன்
மூலம் விண்ணை உணந்தார்கள்?

space என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதை நாம் வெளி என்று கூறுவதில்லை. விண்வெளி என்று தான் கூறுகிறோம். விண் என்றால் என்ன?

சிதம்பரம் கோவில் ஆகாச தலம். சிதம்பர ரகசியம் என்றால் என்ன?

உயிர்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது, உடலில் உள்ள திட பொருட்களாக நிலம் உள்ளது . திரவ பொருட்களாக நீர் உள்ளது . வெப்பமாக நெருப்பு உள்ளது. காற்றாக காற்று உள்ளது . எதுவாக விண் உள்ளது?

இன்றைய விஞ்ஞானம் உயிரை இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. இருக்கிறது என்று மெய்பிக்கவும் முடியவில்லை. உயிரை நம் முன்னோர்கள் எப்படி உணந்தார்கள்?

திருமூலர் உயிர் துகளின் அளவை ஒரு பாட்டில் சொல்கிறார்.

மேவிய சீவன் என்பது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறுது வயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத் தொன்றே

பசுவின் மயிரை குறுக்கில் லட்சம் கூறிட்டால் அதில் ஒரு கூறின் அளவே உயிர் துகளின் அளவு என்று சொல்கிறார். இது மட்டும் அல்ல உயிரின் தன்மைகளை சிவாக்கியர் என்ற சித்தர் சொல்கிறார்.

கறந்தபால் முலைப்புகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.

உடலை விட்டு நீங்கிய உயிர் மிண்டும் உடலுக்குள் போகாது, இறந்தவர் பிறப்பதில்லை என்று சொல்கிறார்.

சித்து என்றால் உயிர் ,அதை பற்றி நன்கு உணர்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கபட்டார்கள். குரு சீடர்க்கு உயிரை உணர்த்துவது தீட்சை என்று அழைக்கபட்டது. தியானம் தான் உயிரை உணர வழி இறையை உணர வழி

நம் மண்ணின் பெருமை ஆன்மிகம். ஆன்மா என்றால் உயிர். உயிரை பற்றிய அறிவியல் தான் ஆன்மிகம். போதிதர்மர் கூட இதை பரப்ப தான் சீனா சென்றார். நம் மக்கள் அதை பதிவு செய்யாமல் விட்டு விட்டனர் .
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!

தொன்று தொட்டு தமிழ் கலாச்சார முறைப்படி பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்தும் பொழுது "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!" என்று வாழ்த்துவார்கள். நல் வாழ்வு வாழ தேவையான பதினாறு இவையே: கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன் மக்கள், நல் ஒழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி.

அபிராமி அந்தாதியின் முதல் பாடலில் இப்பதினாறு செல்வங்களும் "உன் தொண்டர்களுக்கு அருள வேண்டும்" என்று அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.  
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கவடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாதசந் தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
பொருள்: கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

இப்பாடலை தினமும் ஒரு முறையாவது முழு மனதுடன் அன்னை அபிராமியை நினைத்துப் பாடி பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக!


விகட சக்கர விநாயகர்
தக்கனின் யாகத்தை அழிக்க, தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஈசன் வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பினார். அவர் தக்கனின் யாகத்தை அழித்து, தேவர்களை வதம் செய்து, திருமாலுடன் போர் புரியும் போது, திருமால், வீரபத்திரரின் மேல் தனது சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் வீரபத்திரரை நோக்கி விரைந்து வர, அதனை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் இருந்த கபாலம் ஒன்று விழுங்கியது.

தனது சக்கராயுதத்தைத் திரும்பப் பெற, திருமால் தனது சேனாதிபதியான விஷ்வக்சேனரை அனுப்பினார். சிவாலயங்களில் முதலில் விநாயகரை வழிபடுவது போல் பெருமாள் கோவில்களில் விஷ்வக்சேனரை முதலில் வழிபடுவர். 'விஷ்வக்' என்றால், எல்லா இடமும் என்று பொருள். எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் செல்லக்கூடிய படைகளை உடையவர் என்றும் பொருள் உண்டு.

விஷ்வக்சேனர் காஞ்சியை அடைந்து, சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, ஈசனை எண்ணி தவமிருந்தார். அவரின் முன் வீரபத்திரர் காட்சியளித்து, “வேண்டிய வரம் கேள்” எனக் கூற, விஷ்வக்சேனரும் திருமாலின் சக்கரத்தைத் திரும்பத் தருமாறு வேண்டினார். வீரபத்திரர், அதனை விழுங்கிய கபாலத்திடமே எப்படியாவது கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூற, விஷ்வக்சேனர், தனது கை கால்களைக் கோணலாக்கிக் கொண்டு தள்ளாடியபடி ஒரு விகட நடனமாடினார். அதைக் கண்டு வீரபத்திரர் உள்ளிட்ட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். அவர் அணிந்திருந்த மாலையிலிருந்த கபாலமும் சிரிக்க, அதன் வாயிலிருந்து திருமாலின் சக்கராயுதம் கீழே விழுந்து உருண்டோடியது. அதனை விஷ்வக்சேனர் எடுக்கும் முன்னர், விநாயகர் அதனை எடுத்துக் கொண்டார்.

விஷ்வக்சேனர் விநாயகரை வணங்கி, தன்னிடம் திருமாலின் சக்கராயுதத்தைத் திரும்பத் தருமாறு வேண்ட, விநாயகர் தனக்காக மீண்டும் ஒரு முறை தன் முன் விகட கூத்தாடினால் சக்கரத்தைத் திரும்பத் தருவதாகக் கூறினார். அவர் வேண்டிக் கொண்டவாறே விஷ்வக்சேனரும் மறுபடியும் விநாயகர் முன் விகட கூத்தாடி, விநாயகரின் அருள் பெற்று, அவரிடமிருந்து சக்கரத்தைப் பெற்று, அதனைத் திருமாலிடம் சேர்ப்பித்தார்.

இவ்வாறு விகடக் கூத்தை இரசித்த விநாயகரே இன்றும் விகட சக்கர விநாயகராக காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக அமர்ந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.