Saturday, November 3, 2012

இன்றைய ஆன்மீகம்

ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

...
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.

‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை. 
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி... ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.

இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்! இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Sunday, October 21, 2012

ஒருத்தருக்கொருத்தர் உதவணும்!

நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை! கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரை புரண்டது.

இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று
, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.

''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று கேட்டார்.
''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி. உடனே அவர், ''அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இப்பத்தான் உள்ளே போனார். வாங்க அவரைப் பார்க்கலாம்'' என்று கூற, ஆடிப்போய் விட்டான் நம்ம ஆள்!
'இனி, பின்வாங்க முடியாது... என்ன நடக்கப் போகிறதோ? தான் ஓவியர் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால், வெளியே அனுப்பி விடுவார்களோ? இசை நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதே' - தயக்கமும் குழப்பமுமாக அவரைப் பின்தொடர்ந்தான்.

அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.
'என்ன?' என்பது போல் பார்த்தார் அவர்!
''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் ஓவியரான்னு தெரிஞ்சுக்கணும்?''
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!
அவ்வளவுதான்... நம்ம ஆளை சந்தேகப்பட்டவர், இருவரிடமும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு விட்டு, ''உங்க ஆசிரியர் பக்கத்துலேயே நீங்களும் உட்கார்ந்துக்கோங்க'' என்று இவனிடம் கூறிவிட்டு வாசலுக்கு நகர்ந்தார்.
நம்ம ஆளுக்கு போன உயிர் திரும்பி வந்தது.
மெள்ள ஆசிரியரின் பக்கம் திரும்பி, ''ஐயா... என் மானத்தைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி!'' என்றான் நெகிழ்ச்சியுடன்.
உடனே அவர், ''இதுக்கு எதுக்கு தம்பி நன்றி? ஒருத்தருக்கொருத்தர் செய்ற உதவிதானே இது!'' என்றார்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்: ''என்ன புரியலையா? நானும் பத்திரிகை ஆசிரியர் இல்லப்பா. உன்னைப் போல ஓசி டிக்கெட் வாங்கிட்டு வந்தவன்தான்!'' என்றார் சிரித்தபடி.
நண்பர்களே! இன்றைய ஆன்மிக உலகமும் இப்படித்தான் உள்ளது. சீடர்களாக வேடம் தரித்தவர்கள், குருவாக வேடம் தரித்தவர்களிடம் சென்று ஆசி வாங்குகிறார்கள். வேடம் கலைய வேண்டும்; வெளிச்சம் தெரிய வேண்டும்.
அப்போதுதான் உண்மையை அடையாளம் காண முடியும்.

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Saturday, September 29, 2012

யார் பெரிய முட்டாள்?

இரண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்கார
னைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து 'இன்னோவா கார்' ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்.

Friday, September 21, 2012

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!

தொன்று தொட்டு தமிழ் கலாச்சார முறைப்படி பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்தும் பொழுது "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!" என்று வாழ்த்துவார்கள். நல் வாழ்வு வாழ தேவையான பதினாறு இவையே: கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன் மக்கள், நல் ஒழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி.
அபிராமி அந்தாதியின் முதல் பாடலில் இப்பதினாறு செல்வங்களும் "உன் தொண்டர்களுக்கு அருள வேண்டும்" என்று அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கவடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாதசந் தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
பொருள்: கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

இப்பாடலை தினமும் ஒரு முறையாவது முழு மனதுடன் அன்னை அபிராமியை நினைத்துப் பாடி பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக!

Saturday, September 15, 2012

வியாபாரத் தந்திரம்!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன் வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொ
ரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!


மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

Wednesday, September 5, 2012

நான் உன் அடிமை இல்லை!

கெளதமபுத்தர் ஒரு ஊரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் எச்சிலை துப்பினான். தன் மேல் இருந்த எச்சிலை துண்டால் துடைத்து விட்டு, "இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் புத்தர். அருகில் நின்ற புத்தரின் பிரதம சிஷ்யனான ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்!" என்றார். அவன் எழுந்து கேட்டான் - "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தை கூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார், "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா?"

Tuesday, August 28, 2012

மிருக வைத்தியர்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.   பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள்,   "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
 
என்னது மிருக டாக்டர்கிட்டேயா
? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரிலபக் லபக்னு ரெண்டு வாய் தின்னுட்டு , பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
 
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க
! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க!   வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே   நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டைசரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!   இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,   மனைவி சொன்னள்   ` கோட்டான் மாதிரி முழிக்காதீங்க '