Tuesday, July 30, 2013

விற்பனை சாதுர்யம்!

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"விற்பனை துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க, "நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
என்றார் முதலாளி.

முதல் நாள் கடை மூடும் நேரம்
முதலாளி வந்தார்.
"இன்று எத்தனை நபர்களிடம்
விற்பனை செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30
பேரிடம் விற்கக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரிய தூண்டில், அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது
படகு பிரிவிற்கு அழைத்துச் சென்று ஒரு படகை விற்றேன்.  அவர் என்னுடைய கார் இந்த படகை இழுக்குமா எனத் தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றேன்."

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?" மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார், "அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

Saturday, July 27, 2013

துளையிட்ட காசு

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிர்ஷ்டம் என்னைத் தேடி வந்திருக்கிறது. நான் பணக்காரனாகி  விடு­வேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, ­ அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான்.
தன் வேலைகளில் தன்னை சந்தோஷமாக ஈடுபடுத்திக் கொண்டான்.

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் ­ போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து
காசை எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான்.

அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது ­. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான்.
அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.
அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ ­ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

Wednesday, July 24, 2013

தங்கத் தலைவர் காமராஜர்!

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .
அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார். உடனே தன்னுடைய சொந்த செலவில்
ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம்
சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.


பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்து விட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள்பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை, லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .



.....................


தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமராஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார்.
 

ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர், காமராரின் தாய் சிவகாமி அம்மாள்
அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது,  அவர் மிகவும் வருத்ததுடன்
சொன்னது :  " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல. என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல, அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க, அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
 

"அடப்போப்பா, எனக்கு தெரியாதா அம்மாவை அப்படியே கூட்டிட்டு வந்தாலும் தனியாவா வருவாங்க?  அவங்க கூட நாலு பேரு வருவான். அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவாங்க.  இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரம் பண்ணுவான். எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு
வச்சிருக்கேன்." என்றார்.

வருந்தாதே மனமே!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்
லை. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் -  மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நி
லையில் ஒரு வங்கிக் கணக்கு துவக்கும் சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவருடைய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடை
த்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!